10 ஆயிரம் படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட கோவிட் பராமரிப்பு மையம் 15-ந்தேதி மூடல்

10 ஆயிரம் படுக்கைகளுடன் பெங்களூருவில் அமைக்கப்பட்ட கோவிட் பராமரிப்பு மையம் 15-ந்தேதி மூடப்படுகிறது. இதனால் அந்த மையத்திற்காக வாங்கப்பட்ட தளவாட பொருட்கள் மருத்துவமனைகள், விடுதிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

Update: 2020-09-06 20:34 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவலை எதிர்கொள்ள அரசு கட்டிடங்கள், பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதிகள் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. அதுபோல் பெங்களூரு மாநகராட்சி சார்பில் பெங்களூரு சர்வதேச கண்காட்சி அரங்கில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் கோவில் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக பெங்களூருவில் இது திறக்கப்பட்டது.

ஆனால் இந்த மையம் திறக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே மூடப்படுகிறது. அதாவது இங்கு 1,500 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கொரோனா பாதித்த பெரும்பாலானோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற விரும்புகிறார்கள். இதனால் மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இந்த மையத்தை மூடும் படி அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று வருகிற 15-ந்தேதி முதல் இந்த கோவிட் பராமரிப்பு மையத்தை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

தளவாட பொருட்கள் வினியோகம்

இதனால் இந்த மையத்திற்காக வாங்கப்பட்ட இரும்பு கட்டில்கள், மின்விசிறிகள், படுக்கை விரிப்புகள், குப்பை கூடைகள், வாளிகள், குவளைகள், குடிநீர் உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து தளவாட பொருட்களை மாணவர் விடுதிகள், மருத்துவமனைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாகல்கோட்டையில் உள்ள தோட்டக்கலை பல்கலைக்கழக விடுதிகளுக்கு ஆயிரம் தளவாடங்களும், மாணவர்கள் விடுதிகள் மற்றும் சிறுபான்மையின நலத்துறை விடுதிகளுக்கு 2 ஆயிரத்து 500 தளவாடங்களும் வழங்க மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். மீதமுள்ள தளவாடங்களை, வேண்டுகோளின்படி பிற அரசு மருத்துவமனைகள், மாணவர் விடுதிகளுக்கு வழங்கவும் கோவிட் பராமரிப்பு மைய கண்காணிப்பு அதிகாரிக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்