சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2020-09-06 17:42 GMT
சென்னிமலை,

சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னிமலை நகர கிளை செயலாளர் என்.ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

கடும் நெருக்கடியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, குறைந்த வட்டியில் நிபந்தனைகளை தளர்த்தி கடன் வழங்கவேண்டும். கொரோனா கால நெருக்கடியால் விவசாயிகள் அறுவடை செய்த விளை பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் பெரும் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், விவசாயிகள் பெற்றுள்ள வங்கி கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

புதிய கல்வி கொள்கை

நகர்புறத்தில் வேலையில்லாமல் தவித்து வரும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க புதிய நகர்புற வேலை உறுதியளிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை அறிவியல் சார்ந்த நவீன கல்வியை நிராகரித்து, மனுதர்ம வழியிலான குலக்கல்வி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கம் கொண்டிருப்பதால் அதை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் எதிராக மத்திய அரசு அறிவித்துள்ள சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். கொரோனாவின் நெருக்கடி காலத்தில் உயர்த்தப்பட்ட நிலஅளவை கட்டணங்களை ரத்து செய்யவேண்டும்

நிவாரண நிதி

கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 4 மாதங்கள் முடிந்து விட்டன. இந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரமும், புலம்பெயர்ந்த அமைப்புசார தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500-ம் நிவாரண நிதியாக வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யு.சி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் எம்.செங்கோட்டையன், ஆர்.கண்ணுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜ்குமார், ஏ.ரவி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள்.

மேலும் செய்திகள்