திருச்சி காந்திமார்க்கெட் அருகே ஆக்கிரமிப்பு கடையை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் - பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சி காந்திமார்க்கெட் அருகே ஆக்கிரமிப்பு கடையை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் நடந்தது. அங்கு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-06 15:41 GMT
திருச்சி,

திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சிலை அருகே ராஜவேலு என்பவர் கடந்த பல ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறார். இந்த கடையை பல்வேறு நபர்களுக்கு வாடகைக்கு விட்டும் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மாநகராட்சி இடத்தில் கடை கட்டப்பட்டுள்ளதாக கூறி, அதனை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது கடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ராஜவேலு மற்றும் அவரது உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் உதவியுடன் கடையை இடிக்க முயன்றனர். அப்போது பெண் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய பெண்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். அப்போது அவர்கள் சாலையில் படுத்து அழுது புரண்டனர்.

இதையடுத்து கடை உரிமையாளர் தரப்பு வழக்கறிஞர் நாராயணன் வந்து கொரோனா ஊரடங்கு காரணமாக வரும் 30-ந் தேதி வரை எந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடையை இடிக்கும் பணியை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் காந்திமார்க்கெட் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்