ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2020-09-06 20:09 IST
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கோரியம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மகன் பாபா என்ற பிரபாகரன் (வயது 25). இவர் 17 வயதுடைய ஒரு சிறுமியை கடந்த 26-ந் தேதி, அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி சென்றார்.

மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினாராம். இந்நிலையில் சிறுமியை காணாமல் போனது குறித்து, அவரது தந்தை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வடவீக்கம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் பிரபாகரன் 17 வயது சிறுமியுடன் சென்றார்.

இதனையடுத்து போலீசார், பிரபாகரனை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், வடவீக்கம் கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் சிறுமியை அவரது விருப்பப்படி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அந்த சிறுமி 11-ம் வகுப்பு படித்து முடித்து, 12-ம் வகுப்பு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்