கொரோனா விதிகளை பின்பற்றி பஸ்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து தளவாய்சுந்தரம் ஆலோசனை டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசம் வினியோகம்

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குமரியில் பஸ்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து தளவாய்சுந்தரம் ஆலோசனை நடத்தினார். டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2020-09-06 10:33 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் நடந்தது. நிர்வாக இயக்குனர் திருவம்பலம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 50 சதவீத பஸ்கள் தமிழக அரசின் உத்தரவுபடி இயக்கப்படவுள்ளது. மாவட்டத்திற்குள் நகர பஸ்கள் 444, புறநகர் பஸ்கள் 112, கேரள மாநிலத்திற்கு 43 பஸ்கள், திருநெல்வேலி கோட்டத்திற்குள் 106 பஸ்கள், பிற கோட்டங்களுக்கு 55 பஸ்கள் என மொத்தம் 760 பஸ்கள் இயக்க தயார் நிலையில் உள்ளது. இதில் டிரைவர், கண்டக்டர்கள் உள்பட 5,003 பணியாளர்கள் ஈடுபடுவார்கள். ஒரு பஸ்சுக்கு 1 கிலோ மீட்டர் இயக்குவதற்கான செலவு சராசரியாக ரூ.60.72 என, தினசரி ரூ.25 ஆயிரத்து 20 செலவு ஆகிறது. சராசரி ஒரு பஸ்சுக்கு தினசரி இழப்பு ரூ.10 ஆயிரத்து 540 ஆக உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்து துறையில் நஷ்டம் ஏற்பட்டாலும் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து பகுதிகளுக்கும் பஸ்களை இயக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி எந்த விதமான பாதிப்பும் யாருக்கும் வரக்கூடாது என்ற குறிக்கோளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பஸ்கள் முழுமையாக இயக்கப்படும் போது, டிரைவர், கண்டக்டர்கள், பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். அனைவரும் முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து பயணிக்க வேண்டும். டிரைவர், கண்டக்டர் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பஸ்சில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்களை தாமே பாதுகாத்து கொள்ளவேண்டும். தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

கொரோனா தடுப்பு பணிகளை பற்றி தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள அண்ணா தொழிற்சங்கம் வாயிலாக கபசுர குடிநீர், முககவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா நோயின் தாக்கம் குறைந்துவிடும். இவ்வாறு தளவாய்சுந்தரம் கூறினார்.

தொடர்ந்து மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் ஏற்பாட்டில், மாவட்டம் முழுவதும் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தினமும் கபசுர குடிநீர் வழங்க கபசுரக்குடிநீர் பொடி, கேன் உள்ளிட்ட உபகரணங்கள், முககவசங்கள், கையுறைகள் ஆகியவற்றை கிளை மேலாளர்களிடம் தளவாய்சுந்தரம் வழங்கினார்.

பின்னர் ராஜாக்கமங்கலம் யூனியன் சார்பில், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை நிதியில் இருந்து ரூ.96.25 லட்சம் செலவில், 431 மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, கனரக ஓட்டுனர் பயிற்சிதளத்தை தளவாய் சுந்தரம் பார்வையிட்டார்.

கூட்டத்தில், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், அரசு வக்கீல் சுந்தரம், அண்ணா தொழிற்சங்க பிரதிநிதிகள் முருகேசன், விஜயகுமார், சந்தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் பொதுமேலாளர் அரவிந்த் வரவேற்று பேசினார். துணைமேலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்