குன்னூர் அருகே, கலெக்டருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி தலைவர் மகன் தற்கொலை - உறவினர்கள் 3 பேர் கைது

குன்னூர் அருகே கலெக்டருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி தலைவர் மகன் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-09-06 06:15 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பாரத் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். பேரட்டி ஊராட்சி தலைவராக உள்ளார். இவரது மகன் நரேந்திரன்(வயது 31). வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மகேஷ்வரி என்ற மனைவியும், சுஜித் என்ற 3 வயது குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த நரேந்திரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வெலிங்டன் போலீசார் விரைந்து சென்று, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு, நரேந்திரன் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில்,‘ எனது உறவினர்கள் கண்ணன், நித்யா, கஸ்தூரி ஆகியோர் பாரதி நகரில் புதிய கட்டிடம் ஒன்று கட்டி உள்ளனர். அதற்கு அனுமதி பெறவில்லை. அரசுக்கு சொந்தமான தடுப்புச்சுவர் மற்றும் கால்வாய் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அவர்கள் தங்களுக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்துக்கு பதிலாக 3½ சென்ட் நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு கடந்த 2018-ம் ஆண்டு மனு கொடுத்தனர். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்தவில்லை. எனது தந்தை ஊராட்சி தலைவராக இருப்பதால், குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். என் மீது பொய் வழக்கு தொடர்ந்தனர். எங்களது வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் செய்துவிட்டனர். எனது சாவுக்கு அவர்கள் மட்டுமே முழு பொறுப்பு’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நரேந்திரனின் உறவினர்கள் கண்ணன், நித்யா, கஸ்தூரி ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ராணுவ கல்லூரி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்