‘எம்.ஜி.ஆரின் மறு உருவமே’ என நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரை கிழித்து எறிந்த போலீசார் - தேனியில் பரபரப்பு

‘எம்.ஜி.ஆரின் மறு உருவமே‘ என்று நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரை போலீசார் கிழித்து எறிந்ததால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-06 05:45 GMT
தேனி,

தேனி என்.ஆர்.டி. சாலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட இளைஞரணி சார்பில் நேற்று பரபரப்பான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் நடிகர் விஜய், எம்.ஜி.ஆர். போல் உடை அணிந்து சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுவது போலவும், அந்த சைக்கிள் ரிக்‌ஷாவின் பின்னால் எம்.ஜி.ஆர். அமர்ந்து இருப்பது போன்றும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் அந்த போஸ்டரில், “எம்.ஜி.ஆரின் மறு உருவமே! மாஸ்டர் வாத்தியாரே! அழைக்கிறது தமிழகம் தலைமையேற்க. 2021-ல் உங்கள் வரவை காணும் தமிழகம்“ என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலரும் இதை வேடிக்கை பார்த்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் அங்கு சென்று போஸ்டரை கிழித்து அகற்றினர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் மக்கள் இயக்கத்தின் தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்