காரியாபட்டி அருகே, திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர் - இருவீட்டார் முன்னிலையில் கோவிலில் நடந்தது
திருநங்கையை காதலித்து வாலிபர் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் இருவீட்டார் முன்னிலையில் கோவிலில் நடைபெற்றது.;
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வலையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை ஹரினா (வயது 24). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார்.
அதே ஊரைச் சேர்ந்த ஹரினாவின் தாய்மாமா கந்தசாமியின் மகன் கருப்பசாமி (27). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். கருப்பசாமி கடந்த 2 ஆண்டாக ஹரினாவை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஹரினாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது பெற்றோரிடம் கருப்பசாமி தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் கருப்பசாமி தனது காதலில் உறுதியாக இருந்ததால், திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து காரியாபட்டி சுப்பிரமணியசாமி கோவிலில் திருநங்கை ஹரினா-கருப்பசாமி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை காரியாபட்டியில் உள்ள திருநங்கைகள் சேர்ந்து நடத்தி வைத்தார்கள்.
இந்த திருமணம் குறித்து ஹரினாவிடம் கூறியதாவது:-
சிறு வயது முதலே உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. ஆணாக இருந்தாலும் என்னை ஒரு பெண்ணாக உணர்ந்தேன். இந்த நிலையில் என் தாய்மாமன் மகன் கருப்பசாமி என்னை காதலிப்பதாக சொன்னார். திருநங்கைகளிடம் பேசுவதையே அவமரியாதையாக நினைக்கும் இந்த காலத்தில் என்னை காதலிப்பதாக சொன்னதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார்.
இந்த சமூகம் என்னை என்ன சொல்லும்? என்ற தயக்கம் என்னிடம் அதிகமாக இருந்தது. கருப்பசாமி எனக்கு அடிக்கடி தைரியம் கொடுத்து திருமணத்திற்கு இருவீட்டின் சம்மதத்தை பெற்றார். காதலித்த நாங்கள் நினைத்த மாதிரியே திருமணம் செய்து கொண்டோம். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருநங்கையை மணம் முடித்த கருப்பசாமி கூறியதாவது:-
மிகவும் அன்பாக பேசுபவர் ஹரினா. அமைதி, இரக்க குணம் உடையவர். உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இது அவர் மேல் எனக்கு பாசத்தை ஏற்படுத்தியது. ஹரினாவின் மேல் காதல் வந்த போது, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
ஒரு திருநங்கையை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தேன். அதற்கு என் பெற்றோர் கண்டித்தனர். பல நாட்களாக எனது பெற்றோர் என்னிடம் பேசுவதில்லை. உறவினர்களும் என்னை ஏளனமாக பேசினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என் பெற்றோர் மனதை மாற்றி சமாதானப்படுத்தினேன். பின்னர் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து இரு தரப்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.