ராமநாதபுரம் வாலிபர் கொலை வழக்கு: 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
ராமநாதபுரத்தில் நடந்த வாலிபர் கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சரணடைந்த 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் அருண்பிரகாஷ் (வயது24), வசந்தநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் யோகேஸ்வரன் (20) ஆகியோர் கடந்த சில நாட்களுக்குமுன் ஒரு கும்பலால் கத்தியால் குத்தப்பட்டனர்.
அதில் அருண்பிரகாஷ் பலியானார். யோகேஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 12 பேரை தேடினர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராமநாதபுரம் அருப்புக்காரத்தெரு நைனாமுகம்மது மகன் லெப்ட் சேக்அப்துல் ரகுமான் (24), ஷாஜகான் மகன் சதாம்உசேன், உசேன் மகன் காசிம்ரகுமான், அப்துல்லா மகன் முகம்மது அஜீஸ் ஆகியோர் கடந்த 2-ந் தேதி திருச்சி லால்குடி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதற்காக நேற்று காலை மேற்கண்ட 4 பேரும் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். போலீசாரின் மனுவை விசாரித்த நீதிபதி நாளை (7-ந் தேதி) வரை 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.