விருதுநகர் மாவட்டத்தில், ஒரே நாளில் 118 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 14,136 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 14,136 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-09-05 22:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 81 ஆயிரத்து 312 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 6,247 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 12,500 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 53 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 113 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் முத்துராமன்பட்டி பவுன்டு தெருவை சேர்ந்த 29 வயது நபர், முத்தாள் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி, சூலக்கரை முல்லைநகரை சேர்ந்த 54, 34 வயது பெண்கள், 5,9 வயது சிறுமிகள், விருதுநகர் சுப்பையாபிள்ளை தெருவை சேர்ந்த 43 வயது நபர், சிவகாசி அம்மன்நகரை சேர்ந்த 32 வயது நபர், பசும்பொன்நகரை சேர்ந்த 48 வயது நபர், முருகன்காலனியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, நாரணாபுரத்தை சேர்ந்த 54 வயது நபர், விவேகானந்தர் காலனியை சேர்ந்த 36 வயது பெண், திருத்தங்கல் பால்பண்ணை தெருவை சேர்ந்த 24 வயது பெண், தாயில்பட்டியை சேர்ந்த 64,26 வயது பெண்கள், கன்னிச்சேரிபுதூரை சேர்ந்த 60 வயது நபர், விருதுநகர் பட்டாசு ஆலையில் பணியாற்றும் 55 வயது பெண், ஏ.ராமலிங்காபுரத்தை சேர்ந்த 50 வயது நபர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கோடாங்கிபட்டி, நம்பியேந்தல், பூங்குளத்தை சேர்ந்த 2 பேர், திம்முசின்னம்பட்டி, சேதுபுரத்தை சேர்ந்த 5 பேர், கல்லூரணி, நல்லகுளம், கண்டியாபுரம் அகதிகள் முகாமை சேர்ந்த 56, 25 வயது பெண்கள் உள்பட 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 14,136 ஆக உயர்ந்துள்ளது.தொடர்ந்து 3 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலை உள்ளது.முடிவுகள் தெரிவிப்பதிலும் தாமதம் ஏற்படும் நிலையில் நேற்று முன்தினம் வரை 6,247 பேருக்கு முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டிய நிலை இருந்தது.முடிவுகள் தெரிவிப்பதில் தாமதம் ஏற்படுவதால் நோய் பரவலுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டும் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் பொதுபோக்குவரத்து தொடங்கிவிட்ட நிலையில் நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிப்பதோடு, கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவை பின்பற்றி மருத்துவ பரிசோதனை முடிவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்