மதுரை, தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரெயில்களில் 2-ம் வகுப்பு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
மதுரை மற்றும் தூத்துக்குடியில் இருந்து நாளை(திங்கட்கிழமை) சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு முடிந்து, பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
மதுரை,
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நாளை(திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மதுரை கோட்டத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த மதுரை-விழுப்புரம் சிறப்பு ரெயில், திருச்சி-நாகர்கோவில் சிறப்பு ரெயில் ஆகியவற்றுடன் பல்வேறு ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.
அதாவது, மதுரை- சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
மதுரை ரெயில் நிலையத்தில் கிழக்கு நுழைவுவாசல் பகுதியில் உள்ள முன்பதிவு மையத்தில் மட்டும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. இதுதவிர, ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.
இதில் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் காரைக்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில், 3 குளிரூட்டப்பட்ட உட்காரும் வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு உட்காரும் இருக்கை பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில், ஒரு முதல்வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, மூன்று 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில், ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இரண்டு, 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் 10 இரண்டாம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இதில், மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிக்கு 748 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 2-ம் வகுப்பு உட்காரும் இருக்கை வசதி பெட்டிக்கு 804 பயணிகளும், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டியில் 728 பயணிகளும், காரைக்குடி-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு உட்காரும் வசதி பெட்டியில் 570 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதில், பாண்டியன் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து, தலா 30 பயணிகள் வரை 2-ம் வகுப்பு தூங்கும்வசதி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.