ஜேடர்பாளையத்தில் மத்திய அரசை கண்டித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜேடர்பாளையத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் நான்கு ரோடு பகுதியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்புக்கு ஆதார விலையாக ரூ.100 மட்டுமே உயர்த்தி வழங்கிய மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் தாலுகா தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணன், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா அமைப்பாளர் தங்கமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கரும்புக்கு ஆதார விலையாக ரூ.100 மட்டும் உயர்த்தி வழங்கி உள்ளது. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். எத்தனால் தயாரிப்பை அதிகப்படுத்த வேண்டும்.
தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். மின்இணைப்பு கேட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக தமிழக அரசு மின்இணைப்பை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ஆனங்கூர் பகுதி தலைவர் பழனியப்பன் நன்றி கூறினார்.