மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2020-09-05 21:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று ஓசூர் பகுதியில் அதிக அளவில் பரவி வருகிறது.

இந்தநிலையில் ஓசூர் பகுதியில் 27 ஆண்கள், 2 வயது சிறுமி உள்பட 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி பகுதியில் 12 ஆண்கள், 8 பெண்கள் என 20 பேருக்கும், ஊத்தங்கரை பகுதியில் 5 ஆண்கள், 4 பெண்கள் என 9 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

வேப்பனப்பள்ளி பகுதியில் 4 ஆண்கள், 3 பெண்கள் என 7 பேருக்கும், பர்கூர் பகுதியில் 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பேருக்கும், காவேரிப்பட்டணம் பகுதியில் 3 ஆண்கள், ஒரு பெண் என 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மேலும் போச்சம்பள்ளி பகுதியில் ஒரு ஆணுக்கும், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், பெங்களூரை சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 89 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் வசித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்