விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-05 22:00 GMT
பென்னாகரம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

பென்னாகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், நகர செயலாளர் விஜயபாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இண்டூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் சின்னசாமி, நிர்வாகிகள் பெரியண்ணன், சிவன், ராஜகோபால், சரவணன், மாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இதேபோல் நல்லம்பள்ளியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமையிலும், அரூரில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன், நகர செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையிலும், பாப்பாரப்பட்டியில் வட்டார செயலர் பெருமாள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி, தீர்த்தமலை பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் தலா ரூ.7,500 நிவாரண உதவி வழங்க வேண்டும். வங்கி கடன்கள் மீதான வட்டி, கூட்டுவட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒகேனக்கல் உபரிநீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதலுக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்கடன், கறவை மாட்டுகடன் மற்றும் உழவு கருவிகள் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்