பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்து 500 பறிமுதல்

பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.

Update: 2020-09-05 22:15 GMT
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்வதற்கும், வில்லங்க சான்று, திருமண பதிவு, பிறப்பு, இறப்பு பதிவு போன்ற பல்வேறு பணிகளுக்காக சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு பணம் வாங்குவதாக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகன் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்றனர். அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இருந்து வெளியில் யாரும் செல்லாத வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கதவை மூடி சோதனையில் ஈடுபட்டனர்.

மாலை 5.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. 6 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.16 ஆயிரத்து 500-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பாரூர் சார்பதிவாளர் நேருஜி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுற்று வட்டார பொதுமக்கள் அலுவலகத்தின் முன்பு கூடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்