தஞ்சையில், போலீசாரின் அனுமதியின்றி நியாய விலைக்கடை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசாரின் அனுமதியின்றி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜிநகர் அருகே உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் அதையும் மீறி நியாயவிலைக்கடை பணியாளர்கள் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் அறிவழகன், போராட்டக்குழு தலைவர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், கொரோனா தொற்றால் மரணம் அடைந்த ஊழியர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 100 சதவீதம் வழங்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு சாதனங்களை பெயரளவுக்கு வழங்காமல் கொரோனா காலம் முடியும் வரை வழங்க வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்கள் அனைவருக்கும் ஏ.டி.எம். மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தநிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக்கடை பணியாளர்களை தெற்கு போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.