மீன் கழிவுகளால் ஆன உரம் மூலம் நெல் சாகுபடியில் அமோக விளைச்சல் அபிஷேகப்பாக்கம் விவசாயி அசத்தல்

மீன் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட உரத்தை பயன்படுத்தி நெல் சாகுபடியில் அமோக விளைச்சல் எடுத்து அபிஷேகப்பாக்கம் விவசாயி அசத்தி உள்ளார்.;

Update:2020-09-06 06:24 IST
பாகூர்,

தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். இயற்கை விவசாயி. கடந்த 10 ஆண்டுகளாக தனது நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். நிலத்திற்கு தேவையான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வெளிச் சந்தையில் இருந்து வாங்காமல் சுயமாகவே உரம் தயாரித்து வயல்களில் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு கடல் மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்து தனது விவசாய நிலத்தில் முத்துக்குமரன் சோதனை செய்து பார்த்தார். இதில் முன்பு இருந்ததை காட்டிலும் அதிக அளவில் மகசூல் கிடைத்தது. இதையடுத்து கடல் மீன் கழிவுகளை விலைக்கு வாங்கி, அதனுடன் கால்நடை சாணம், வைக்கோலை சேர்த்து அதனை 2 மாதங்களாக மக்க வைத்து, இயற்கை உரமாக முத்துக்குமரன் மாற்றினார்.

இந்த உரத்தின் தரம் குறித்து அறிந்து கொள்வதற்காக ஆரோவில்லில் உள்ள சோதனைக்கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில் 40 சதவீதத்திற்கு மேல் கரிமச்சத்து இருப்பதும் மண் வளத்தை அதிகரிப் பதும் தெரியவந்தது. இதையடுத்து தனது வயலில் இந்த இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொண்டார். இந்த உரத்தின் மூலமாக நெல், காய்கறி மற்றும் பூ பயிரிட்டு வருகிறார்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து விவசாயி முத்துக்குமரன் கூறியதாவது:-

புதுவையில் உள்ள விவசாய நிலத்தில் கரிமச்சத்து குறைந்து பயிர் செய்வதற்கு உயிர்ச்சத்து அற்ற நிலையே உள்ளது. இந்த சத்தை அதிகரிக்க ஒரு ஏக்கருக்கு 10 வண்டி மாட்டுச்சாணம் தேவைப்படுகிறது. ஆனால் மீன் கழிவுடன் தயாரிக்கப்படுகின்ற இந்த உயிர்ச்சத்து உரங்களை 10 மூட்டை போட்டாலே அந்த நிலத்திற்கு தேவையான சத்துகள் கிடைத்துவிடும்.

சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை உரத்திற்கு செலவு ஆகும். ஆனால் மீன் கழிவுகளுடன் தயாரிக்கப்படும் உரத்துக்கு செலவு மிகவும் குறைவு. இயற்கை விவசாயத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டை வரை நெல் கிடைக்கும். இது போன்ற கரிமச் சத்துகள் நிறைந்த உரங்களை வயலுக்கு போட்டதால் 40 மூட்டை வரை மகசூல் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்