பாளையங்கோட்டையில் மகனை கத்தியால் குத்திய தந்தை தற்கொலை

பாளையங்கோட்டையில் மகனை கத்தியால் குத்திய தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-09-05 22:15 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 58). இவருடைய மனைவி விஜயா. இவர்களுடைய மகன் டேவிட் (32). இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அற்புதராஜிக்கும், விஜயாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனை மகன் டேவிட் தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த அற்புதராஜ் கத்தியால் டேவிட்டை குத்தினார். இதில் காயம் அடைந்த டேவிட்டை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற அற்புதராஜ், இரவில் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. எனவே அவரை உறவினர்கள் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் வழியில் அற்புதராஜ், மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். மகனைக் கத்தியால் குத்திய சோகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று, அற்புதராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்