5 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரியில் ஓட்டல்கள், விடுதிகள் திறப்பு - வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரியில் 5 மாதங்களுக்கு பிறகு ஓட்டல்கள், விடுதிகள், கடைகள் திறக்கப்பட்டன. வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கிறது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு உலகில் எங்கும் காண முடியாத 3 கடல்கள் சங்கமிக்கிறது. மேலும், கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம் உள்ளிட்ட ஏராளமான காட்சி கூடங்கள் உள்ளன.
இதனால் கன்னியாகுமரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கொரோனா ஊரடங்கால் இங்குள்ள சுற்றுலா தலங்கள், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில், வெங்கடாசலபதி கோவில், அலங்கார உபகாரமாதா திருத்தலம் என அனைத்து வழிபாட்டு தலங்களும், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் தங்குவதற்காக உள்ள 106 விடுதிகள் மற்றும் ஓட்டல்கள், கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
கடந்த 1-ந் தேதி ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஊரடங்கு தளர்வை தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் கன்னியாகுமரியில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள், கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன. முதல் 2 நாட்கள் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு சென்று வந்தனர்.
தற்போது வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற நாட்களில் வாகன போக்குவரத்து முழு அளவில் தொடங்கியதும் கன்னியாகுமரி இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு காலத்தில் கன்னியாகுமரி கடற்கரையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கடல் சங்கம கடற்கரையில் அழகிய கேலரி, வண்ண கற்கள் பதிக்கப்பட்ட நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வியக்க வைக்கும் வகையில் கடற்கரை அழகு படுத்தப்பட்டு வருகிறது.