கோவையில் இருந்து சென்னை, மயிலாடுதுறைக்கு சிறப்பு ரெயில்கள் - நாளை மறுநாள் முதல் இயக்கப்படுகிறது
கோவையில் இருந்து சென்னை, மயிலாடுதுறைக்கு சிறப்பு ரெயில்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளன.
கோவை,
கோவையில் இருந்து சென்னை மற்றும் மயிலாடுதுறைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி நாளை மறுநாள் மதியம் 3.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரவு 11 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை அடைகிறது.
இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி சந்திப்பு, வாலாஜா ரோடு, அரக்கோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இதில் 2-ம் வகுப்பு பெட்டிகள் 14 மற்றும் சரக்கு பெட்டிகள் 2 இணைக்கப்பட்டு இருக்கும்.
செவ்வாய்க்கிழமை தவிர்த்து பிற நாட்களில் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறைக்கு சென்ற டைகிறது. இருகூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, பாபநாசம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இதேபோல் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 9.15 மணிக்கு கோவை வந்தடைகிறது. கோவையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தைசென்றடைகிறது. இந்த ரெயில் வடகோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். மறு மார்க்கமாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 02079) இரவு 9.15 மணிக்கு கோவை வந்தடையும்.
கோவையில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 6.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயில் வடகோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இதுபோல் மறு மார்க்கமாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரெயில் கோவைக்கு மறுநாள் காலை 6 மணிக்கு வந்தடையும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரெயில் மறுநாள் காலை 4.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை அடையும். இந்த ரெயில் கோவை, வடகோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இதேபோல் மறு மார்க்கமாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ரெயில் சேவை தொடங்குவதையடுத்து கோவை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பெட்டிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பெட்டிகளில் உள்ள கைப்பிடிகள், ரெயில் நிலைய வளாகம், நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.