மயிலாடுதுறையில் மாடுகளை திருடிய 2 பேர் கைது - சரக்கு ஆட்டோ பறிமுதல்
மயிலாடுதுறையில்மாடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாடுகளை திருட பயன்படுத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி சிவன் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது32). கடந்த 25-ந் தேதி இவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பசுமாடு திருட்டுப்போனது. இதைப்போல நல்லத்துக்குடியை சேர்ந்த அர்ஜுனன் (65) என்பவருக்கு சொந்தமான பசுமாடும் திருட்டுப்போனது. இது குறித்த புகார்களின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கம்பிபாளையம், கடம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசீலன் மகன் வசந்தகுமார் வீட்டில் மீனாட்சி, அர்ஜுனன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று வசந்தகுமாரின் வீட்டில் கட்டப்பட்டிருந்த 2 பசு மாடுகளையும், மாடுகளை திருடி செல்ல பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வசந்தகுமாரும், நல்லத்துக்குடி சிவன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சண்முகம் என்ற மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து மாடுகளை திருடி சரக்கு ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சண்முகம் என்ற மணிகண்டன்(38), வசந்தகுமார்(29) ஆகிய இருவரையும் கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.