பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை

பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-09-04 20:41 GMT
புதுச்சேரி,

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் நிவாரண ஆணையர் அன்பரசு, கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், இந்திய மருத்துவமுறை இயக்குனர் ஸ்ரீராமுலு, டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

வீடுவீடாக பரிசோதனை

* கொரோனா தொற்று அதிகம் பரவும் 26 இடங்களில் வீடுவீடாக சென்று முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகள் குறித்து விவரம் சேகரித்து சோதனை நடத்துவது. இந்த பணிகளில் பயிற்சி பெற்ற 15 நர்சுகளை பயன்படுத்துவது.

* இதற்கான பணிகளில் புதுவை என்ஜீனியரிங் கல்லூரி, சித்த மருத்துவ மைய வாகனங்களை பயன்படுத்துவது.

* ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளில் தனியார் பரிசோதனை மையங்களையும் ஈடுபடுத்துவது.

* இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 150 படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுடன் அமைப்பது, கல்லூரியின் மாணவர் விடுதியில் 200 படுக்கைகளை அமைப்பது.

ஆபத்தான நோயாளிகள்

* வீடுகளில் தனிமைப்படுத்துவது தொடர்பாக நேரடியாக சென்று ஆய்வு செய்வது. மிகவும் ஆபத்தான நோயாளிகளை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றுவது.

* இந்த பணிகளுக்கு புதுவை அரசின் சாலைப்போக்குவரத்துக்கழக மினி பஸ்கள், தனியார் பள்ளி பஸ்கள் போன்றவற்றை பயன்படுத்துவது. மேலும் 10 தனியார் ஆம்புலன்சுகளை கையகப்படுத்துவது.

* நர்சுகள் மூலம் கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுப்பது அதற்கு மறுப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது.

மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் செய்திகள்