176 நாட்களுக்கு பிறகு மீண்டும் 7-ந் தேதி சேவை தொடக்கம் நெரிசல் மிக்க நிலையங்களில் மெட்ரோ ரெயில் நிற்காது

பெங்களூருவில் 176 நாட்களுக்கு பிறகு மீண்டும் 7-ந்தேதி மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது. இந்த நிலையில் நெரிசல் மிக்க நிலையங்களில் மெட்ரோ ரெயில் நிற்காது என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Update: 2020-09-04 20:02 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து 176 நாட்களுக்கு பிறகு மீண்டும் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில் சேவை வருகிற 7-ந் தேதி முதல் தொடங்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களின் வெளியேறும் மற்றும் உள்ளே நுழையவும் வாயில் கதவுகள் திறக்கப்பட மாட்டாது. பயணிகள் அருகில் உள்ள இன்னொரு ரெயில் நிலையத்திற்கு சென்று மெட்ரோ ரெயிலில் பயணிக்க வேண்டும். பண பரிமாற்றத்திற்கு அனுமதி இல்லை. ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மட்டுமே பயணிகள் பயணிக்க வேண்டும். ஆன்லைனில் பண பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும்.

400 பயணிகள் மட்டுமே

ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்கள், நுழைவு பகுதியில் டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்தி அந்த கார்டை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ளே வரும்போதும், வெளியே செல்லும்போதும், ஸ்மார்ட் கார்டுகளை அதன் மீது வைக்கக்கூடாது. அவற்றின் அருகில் காட்டினாலே போதும், கட்டணத்தை அந்த உபகரணம் எடுத்துக் கொள்ளும்.

பயணிகள் ஒரு பையை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ரெயில் பெட்டிக்குள் 2 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். ஒரு முறை ரெயிலில் 400 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு நுழைவு வாயில் மூடப்படும். அவர்கள் ரெயிலில் ஏறி சென்ற பிறகு அடுத்த பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நிலையத்தில் 400 பேர் ரெயிலில் ஏறியிருந்தால், அந்த ரெயில் அடுத்த நெரிசல் மிக்க நிலையத்தில் நிற்காது.

வாகனங்கள் நிறுத்த தடை

ரெயிலுக்குள் மஞ்சள் வண்ணத்தில் இடப்பட்டுள்ள குறியீட்டில் மட்டுமே நிற்க வேண்டும். தானியங்கி படிக்கட்டுகளிலும் சமூக இடைவெளியை பயணிகள் பின்பற்ற வேண்டும். தானியங்கி மின்தூக்கியில் அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே செல்ல வேண்டும். ரெயில்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் வெப்பநிலை 24-28 சென்டிகிரேடு என்ற அளவில் பராமரிக்கப்படும். மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்