கோவையில் இயக்கப்படும் அரசு பஸ்களை குறைத்ததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பு
கோவையில் இயக்கப்படும் அரசு பஸ்களை குறைத்ததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
கோவை,
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் 1-ந் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. முதல் நாளில் கோவையில் 406 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், இதனால் வருவாய் குறைந்து இருப்பதாகவும் கூறி பஸ்களின் எண்ணிக்கையை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் குறைத்துள்ளனர்.
கோவை மாநகரில் நேற்று 161 பஸ்களும், புறநகர் பகுதிகளுக்கு 60 பஸ்களும் இயக்கப்பட்டன. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர பகுதிக்குள் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுவதாகவும், கிராமங்களுக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் பஸ்நிலையங்களில் பயணிகள் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். குறிப்பாக காந்திபுரம் பஸ் நிலையத்தில் காலை முதல் புறநகர் பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்றனர். பின்னர் பஸ்கள் வந்ததும் அவர்கள் அதில் ஏறி சென்றனர். இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பஸ்சுக்குள் நின்றபடி பயணம் செய்தனர். இதனால் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
இது குறித்து பயணிகள் கூறும்போது, தற்போதுதான் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பயணிகள் கூட்டம் இல்லை என்ற காரணத்துக்காக பஸ்கள் குறைக்கப்பட்டு விட்டன. இதனால் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. படிப்படியாக பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவை மாவட்டத்தில் 221 பஸ்களும், நீலகிரி மாவட்டத்தில் 86 பஸ்களும், ஈரோட்டில் 120 பஸ்களும், திருப்பூரில் 115 பஸ்கள் என்று மொத்தம் 542 பஸ்கள் இயக்கப்பட்டது என்றனர்.