திருமணம் செய்ய சம்மதிக்காததால் போலீஸ் நிலையம் முன்பு கல்லூரி மாணவி தீக்குளிக்க முயற்சி - காதலன் கைது
திருமணம் செய்ய சம்மதிக்காததால், நிலக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையம் முன்பு கல்லூரி மாணவி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியை சேர்ந்த வேலுச்சாமி மகள் சுகன்பிரியா (வயது 20). இவர், திண்டுக்கல் அருகே ஆலமரத்துப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான முத்துக்குமார் (24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே நெருக்கமான பழக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து சுகன்பிரியா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி முத்துக்குமாரிடம் கூறியுள்ளார். ஆனால் முத்துக்குமார், திருமணம் செய்ய சம்மதிக்காமல் காலதாமதம் செய்து வந்தார்.
இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சென்ற சுகன்பிரியா, காதலனை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் சுகன்பிரியாவின் காதலனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், திருமணம் குறித்து முடிவெடுக்க சற்று கால அவகாசம் வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுகன்பிரியா அழுதபடியே அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் மண்எண்ணெய் கேனுடன் அங்கு வந்த அவர், போலீஸ் நிலையம் முன்பு தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார், ஓடிச்சென்று அவரை தடுத்தனர்.
இதற்கிடையே சுகன்பிரியா கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர், நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேடசந்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். மகளிர் போலீஸ் நிலையம் முன்பு கல்லூரி மாணவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.