உப்புக்காற்றில் துருப்பிடிக்காமல் இருக்க பாம்பன் ரெயில் பாலத்தில் அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணி

உப்புக்காற்றினால் துருப்பிடிக்காமல் இருக்க பாம்பன் ரெயில் பாலத்தில் அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2020-09-03 22:00 GMT
ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் அமைந்துள்ள ரெயில் பாலமானது, மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாம்பன் கடலில் அமைத்த 146 தூண்கள் மீது 145 இரும்பு கர்டர்களும், அதன் மீது தண்டவாளங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. பாலத்தின் மைய பகுதியில் கப்பல் செல்ல வசதியாக தூக்குப்பாலம் உள்ளது.

பாம்பன் ரெயில் பாலத்தில் உள்ள அனைத்து இரும்பு கர்டர்களும் உப்புக்காற்றால் துருப்பிடிக்காமல் இருக்கும் வகையில் அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணி தொடங்கி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாம்பன் ரெயில் பாலத்தில் உப்புக்காற்றால் துருப்பிடிக்காத வகையிலான அலுமினிய பெயிண்ட் ஆண்டுக்கு ஒரு முறை அடிப்பது வழக்கம். அது போல் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் மட்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை அலுமினிய பெயிண்ட் அடிக்கப்படும். தற்போது ரூ.45 லட்சம் நிதியில் ரெயில் பாலத்தில் அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்னும் 2 மாதத்தில் பாலத்தில் அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணி முழுமையாக முடிவடையும். ஏற்கனவே தூக்குப்பாலத்தில் ரூ.23 லட்சம் நிதியில் மராமத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

புதிய ரெயில் பாலம் கட்டும் பணி முடிந்து பயன்பாட்டுக்கு வரும் வரையில் தற்போதுள்ள ரெயில் பாலத்தில் வழக்கம்போல் ரெயில் போக்குவரத்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதுள்ள ரெயில் பாலம் கட்டப்பட்டு 105 ஆண்டுகளை கடந்துவிட்டதால் அருகிலேயே ரூ.250 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்