7-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்க அனுமதி: போக்குவரத்துக்கு தயாராகி வரும் மதுரை ரெயில் நிலையம்

மதுரை கோட்டத்தில் வருகிற 7-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதை தொடர்ந்து, ரெயில் நிலையத்தில் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Update: 2020-09-03 22:15 GMT
மதுரை,

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரம் முதல் நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பதிலாக அந்தந்த மாநிலங்களுக்குள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி, மதுரை கோட்ட ரெயில்வேயில், மதுரையில் இருந்து விழுப்புரத்துக்கு ஒரு சிறப்பு பாசஞ்சர் ரெயிலும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டது. இதற்கிடையே, தமிழக அரசு ரெயில் சேவைக்கு தடைவிதித்தது.

அதனை தொடர்ந்து சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே, கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வருகிற 7-ந் தேதி முதல் தமிழகத்தில் பொதுபோக்குவரத்து தொடங்க மாநில அரசு அனுமதியளித்தது. அதனை தொடர்ந்து ஏற்கனவே இயக்கிய சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே உத்தரவிட்டது.

இதன்படி மதுரை கோட்டத்தில் மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-சென்னை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், மதுரை-விழுப்புரம் பாசஞ்சர் ரெயில், திருச்சி-நாகர்கோவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியன இயக்க மத்திய ரெயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது.

அத்துடன், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் இருந்து மதுரை-செங்கோட்டை, ராமேசுவரம், பொள்ளாச்சி, நெல்லை மற்றும் தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு பாசஞ்சர் ரெயில்கள் இயக்க அனுமதி கேட்டு தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பாசஞ்சர் ரெயில்கள் இயக்க அனுமதி கிடைத்தால் சாமானிய மக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் பயன்பெற வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, வருகிற 7-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளதால் மதுரை ரெயில் நிலையத்தில் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளனர். இதற்காக நேற்று ரெயில் தண்டவாளங்கள், ரெயில் நிலைய வளாகங்களில் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.

பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து எளிதில் வந்து செல்வதற்கு ஏற்ப தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பூட்டிக்கிடந்த மதுரை ரெயில் நிலையம் நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்