விருதுநகர் மாவட்டத்தில், புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று - 2 பேர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 125 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 13,789பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 5,028 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 12,250 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 54 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 141 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த 25, 20, 21 வயது பெண்கள், முல்லைநகரை சேர்ந்த 38 வயது பெண், 50 வயது நபர், விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 31 வயது பெண், செவல்பட்டி மேலத்தெருவை சேர்ந்த 26 வயது பெண், வீரார்பட்டியை சேர்ந்த 57 வயது நபர், அருப்புக்கோட்டை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 30 வயது நபர், சிவகாசியை சேர்ந்த 17 பெண்கள், 12 ஆண்கள், பனையூர், புதூர், விளாங்குடி, வளையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உள்பட 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13,914 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204ஆக உயர்ந்துள்ளது. தனியார் மையங்கள் மூலம் வெளியிடப்படும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் பட்டியலில் பாதிக்கப்பட்ட நபர் எந்த பகுதியை சேர்ந்தவர், அவருக்கு எங்கு பரிசோதனை செய்யப்பட்டது, பரிசோதனைக்கு வந்த மொத்த மாதிரிகள் எத்தனை, பாதிப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை எத்தனை என்ற முழு விவரங்கள் குறிப்பிடப்படாமல் உள்ளது.
இதனால் தங்கள் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது அந்த கிராமப்பகுதி மக்களுக்கே தெரிய வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. மேலும் கிராம மக்கள் சுய கட்டுப்பாடுடன் செயல்படுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. எனவே பரிசோதனை முடிவு பட்டியலில் பாதிக்கப்பட்டவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரத்தினை குறிப்பிடுமாறு தனியார் பரிசோதனை மையங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டியது அவசியம் ஆகும்.