மாவட்டத்தில், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 58 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,355 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,355 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 2,298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, சேலம் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,297 ஆனது.
இந்த நிலையில் நேற்று பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர், நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் பள்ளி ஆசிரியை, பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், நாமக்கல் சிலுவம்பட்டி போலீசார் குடியிருப்பில் வசித்து வரும் 2 பெண் போலீசார் உள்பட 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று நாமக்கல்லில் 11 பேர், குமாரபாளையத்தில் 10 பேர், பள்ளிபாளையத்தில் 8 பேர், திருச்செங்கோட்டில் 5 பேர், ராசிபுரத்தில் 4 பேர், வடுகம் மற்றும் நவனி வெள்ளாளப்பட்டியில் தலா 2 பேர் வீதம் 4 பேர், மோகனூர், பொத்தனூர், ஆலம்பாளையம், காக்காவேரி, நாமகிரிப்பேட்டை, பிள்ளாநல்லூர், வெள்ளாளப்பட்டி, காடச்சநல்லூர், வெடியரசம்பாளையம், சீதாரம்பாளையம், சூரியம்பாளையம், காளப்பநாயக்கன்பட்டி, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர் உள்பட மொத்தம் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,355 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 111 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,735 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 40 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 580 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.