புதிதாக 214 பேருக்கு நோய் தொற்று சேலத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது - சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பலி
சேலத்தில் நேற்று மேலும் 214 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பலியானார்கள்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நோய் தொற்றால் 403 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 127 பேர், எடப்பாடி பகுதியில் 4 பேர், காடையாம்பட்டியில் ஒருவர், கொங்கணாபுத்தில் 4 பேர் மேச்சேரியில் 2 பேர், மேட்டூர் நகராட்சியில் ஒருவர், நங்கவள்ளியில் ஒருவர், ஓமலூரில் 11 பேர், சேலம் ஒன்றியத்தில் 4 பேர், சங்ககிரியில் 8 பேர், தாரமங்கலத்தில் 5 பேர், வீரபாண்டியில் 12 பேர், ஆத்தூர் நகராட்சியில் 6 பேர், ஆத்தூர் ஒன்றியத்தில் 3 பேர், அயோத்தியாபட்டணத்தில் 2 பேர், கெங்கவல்லியில் 4 பேர், வாழப்பாடியில் 5 பேர், தலைவாசலில் 2 பேர், நரசிங்கபுரம், ஆரியபாளையம், பனமரத்துப்பட்டி, வாழவந்தி ஆகிய பகுதியில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த 2 பேர், மற்றும் பீகாரில் இருந்து வந்த 3 பேர், ஜார்க்கண்ட், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் வீதமும் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 214 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 350 பேர் குணம் அடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
காடையாம்பட்டி அருகே முத்துநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 58). இவர் சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கருப்பூரில் உள்ள சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்சில் அவரை ஏற்றிக்கொண்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி, செவ்வாய்பேட்டையை சேர்ந்த 75 வயது முதியவர், கெங்கவல்லி பகுதியை சேர்ந்த 56 வயது நபர் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவரும், 60 வயது நபரும் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.