8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலத்தில் விவசாயிகளுடன் 6 எம்.பி.க்கள் ஆலோசனை

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலத்தில் விவசாயிகளுடன் 6 எம்.பி.க்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

Update: 2020-09-03 22:45 GMT
சேலம்,

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதாவது, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.

ஆனால் இந்த திட்டத்துக்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தும், 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட கோரியும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் இந்த திட்டத்துக்கு எதிராக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்தது. ஆனால் அதனை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுவது தொடர்பாக சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் நேற்று காலை 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), டாக்டர் பொன்.கவுதமசிகாமணி (கள்ளக்குறிச்சி), டாக்டர் செந்தில்குமார் (தர்மபுரி), செல்லக்குமார் (கிருஷ்ணகிரி), எம்.கே.விஷ்ணுபிரசாத் (ஆரணி), செல்வம் (காஞ்சீபுரம்) மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், எம்.பி.க்கள் பேசும்போது, சேலம்- சென்னை 8 வழிச்சாலையால் பல ஏக்கர் விவசாய நிலங்கள், அதில் உள்ள மரங்கள், மலைகள் அழியும் நிலை ஏற்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து இதுபோன்ற திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது, என்றனர். தொடர்ந்து நடந்த விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டத்தில், ஏற்கனவே சேலம்-சென்னை இடையே 4 வழி, 6 வழி, 2 வழி என மூன்று சாலைகள் உள்ளன. மேலும் ரெயில் பாதையும் உள்ளது.

இதனால் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள சென்னைக்கும், சேலத்திற்கும் இடையே உள்ள 3 சாலைகளை விரிவாக்கம் செய்து பயன்படுத்தலாம். மேலும், ரெயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். இதனால் செலவுகளும் குறையும். 8 வழிச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடியை விரயம் செய்வது ஏற்புடையது அல்ல. பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை அழித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்க தேவையில்லை. எனவே சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எம்.பி.க்கள் மற்றும் விவசாயிகள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்