தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை பணிக்காக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

தஞ்சை-விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ராட்சத இரும்பு தூண்கள் கொண்டு பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2020-09-03 22:30 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை-விக்கிரவாண்டி இடையே 165 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.3 ஆயிரத்து 517 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் கூட்டுரோடு, தஞ்சை மாவட்டம் கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகும்.

இதையடுத்து தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டு விரைவாக நடந்து வருகிறது. தற்போது கருப்பூர்-சோழபுரம் வரை தார்சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

மேலும் விக்கிரவாண்டி-தஞ்சை இடையே உள்ள வெள்ளியனூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய முக்கிய இடங்கள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரையில், கொள்ளிடம் ஆற்றில் வடக்கு பிரிவு மற்றும் தெற்கு பிரிவை இணைப்பதற்காக முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைப்பதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு கான்கிரீட் தூண்களுக்கு இடையே ராட்சத தூண்கள் வைக்கப்பட்டு, அதன் மேல் பகுதியில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலைகள் கிரேன் மூலம் தூக்கி வைக்கப்படும்.

தயாரிக்கப்பட்ட கான்கிரீட் தூண்களை கிரேன் மூலம் ஆற்றில் எடுத்து சென்றால் மணலில் பதிந்து விடும் என்பதற்காக, தூண்களுக்கு நடுவே ராட்சத இரும்பு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கான்கிரீட் போடப்பட்டு பின்னர் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலைகளை அதன் மேல் வைக்கப்பட உள்ளது.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பாலப்பணிகளில் ஒரு புறம் தொய்வு ஏற்பட்டாலும், மறுபுறம் பாலம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்