திருக்காட்டுப்பள்ளி அருகே, இரும்பு கம்பியால் அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி கைது
திருக்காட்டுப்பள்ளி அருகே இரும்பு கம்பியால் அண்ணனை அடித்துக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.;
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளியை அடுத்த புதுச்சத்திரம் குடியான தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 40) விவசாயி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரது தம்பி சோனி என்கிற ராஜகோபால்(37). இவர் மாட்டு வண்டி வைத்து ஓட்டி வருவதுடன், விவசாயமும் செய்து வருகிறார். ராஜகோபால் பலரிடம் நிறைய கடன் வாங்கி செலவு செய்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த சந்திரசேகர் தனது தம்பியிடம், ஏன் நிறைய கடன் வாங்கி செலவு செய்கிறாய்? என்று கேட்டு அவரை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ராஜகோபால், மாட்டு வண்டி நுகத்தடியில் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியை எடுத்து சந்திரசேகரை தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அண்ணனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.