பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு பாதையில் வருகிற 7-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில் ஓடும் 400 பயணிகளை மட்டுமே அனுமதிக்க திட்டம்

வருகிற 7-ந் தேதி முதல் பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு பாதையில் மட்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. 400 பயணிகளை மட்டுமே அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2020-09-04 00:42 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு மெட்ரோ ரெயில்களை இயக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு மெட்ரோ ரெயில் போக்குவரத்து கழகம், வருகிற 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில்கள் காலையில் 3 மணி நேரம் அதாவது காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலையில் 3 மணி நேரம் அதாவது 4.30 முதல் 7.30 மணி வரை மட்டும் இயக்க முடிவு செய்துள்ளது. பையப்பனஹள்ளி-மைசூரு ரோடு இடையே மட்டும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. நாகசந்திரா-எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து 2 நாட்கள் தாமதமாக 9-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மணி நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஒரு விரிவான வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரெயில் கழக நிர்வாக இயக்குனர் அஜய்சேத் கூறியுள்ளார். சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கத்தில் ஒரு ரெயிலில் அதிகபட்சமாக 400 பேர் வரை மட்டுமே அனுமதிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இருக்கைகளில் குறியீடு உள்ள இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர வேண்டும். அருகில் ஒரு இருக்கை காலியாக விடப்படுகிறது. டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பயணிகள் பயணிக்க வேண்டும். ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படாது. ஆனால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த செயலியை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். பயணிகள் குறைந்த அளவு சரக்குகளை கொண்டு வர வேண்டும் என்று மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்