கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருத்துறைப்பூண்டியில் நடந்தது
கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், கட்சியின் நகர செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கொரோனா ஊரடங்கினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கியுள்ள வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
நகர்புறத்தில் வேலையின்றி தவித்து வரும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கும் வகையில் நகர்புற வேலை உறுதியளிப்பு திட்டம் கொண்டுவர வேண்டும். கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், விவசாய சங்க நகர செயலாளர் சுந்தர், முன்னாள் நகர செயலாளர் முத்துக்குமரன், விவசாய சங்க நகர தலைவர் பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கொரேனா நிவாரணமாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர குழு சார்பில் பிரசார இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் பார்த்திபன், சின்னகண்ணு, இளைஞர் பெருமன்ற நகர செயலாளர் சிவ.ரஞ்சித், நிர்வாகிகள் பக்கிரிசாமி, கணேசன், செந்தில், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.