சன்னதி தெருவில் 3 பேருக்கு கொரோனா: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழி மூடல் - பக்தர்கள் ஏமாற்றம்
சன்னதி தெருவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழி மூடப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருத்துறைப்பூண்டி,
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 5 மாதங்களுக்கு மேல் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறக்கப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரசித்திபெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் பூட்டி இருந்தது. இந்த கோவில் அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தமிழக அரசு கடந்த 1-ந் தேதி முதல் கோவில்கள் திறக்கவும், பக்தர்கள் வழிபடவும் அனுமதி வழங்கியது. இந்தநிலையில் கோவில் திறக்கப்பட்ட 2 நாட்களில் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் நகராட்சி அதிகாரிகள் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெரு நுழைவு வாயிலுக்கு யாரும் செல்லாதபடி மூடிவிட்டனர்.
இதன் உள்ளே வங்கிகள், சேவை மையங்கள், குடியிருப்புகள், மளிகை கடைகள், மருத்துவமனை, தங்கும் விடுதி ஆகியவை உள்ளன. பாதை அடைக்கப்பட்டதால், கோவிலுக்கு செல்லமுடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா தொற்று ஏற்பட்ட அந்த இடத்தை மட்டும் முடக்காமல் அந்த பகுதியையே முடக்கி இருப்பது பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.