சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 11 மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - நெல்லையில் நடந்தது

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 11 மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது.

Update: 2020-09-03 22:45 GMT
நெல்லை,

நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் பாரதீய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி மண்டல உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாநில துணை தலைவரும், தென்மண்டல பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.

நெல்லை மாவட்ட பார்வையாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மகராஜன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் உமா ரதி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தலில் தனியாக போட்டியிட்டால் எப்படி எதிர்கொள்வது, கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எப்படி சந்திப்பது? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

முன்னதாக நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “தற்போது அ.தி.மு.க. கூட்டணி தொடர்கிறது. தேர்தலின்போது கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதிக அளவு தொகுதிகளில் போட்டியிடுவோம். கட்சியின் ஓட்டு வங்கி அனைத்து தொகுதியிலும் உள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே பா.ஜனதா போட்டியிட்டது. தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் பா.ஜனதா போட்டியிட்டு வெற்றி பெறும். அந்த தொகுதியில் ஏராளமான தலைவர்கள் இருக்கிறார்கள். கட்சி மேலிடம் வாய்ப்பு அளித்தால் நானும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினி விருப்பப்பட்டால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கலாம்” என்றார்.

மேலும் செய்திகள்