பள்ளிக்கூடங்களில் முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தினால் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கலாம் - தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது.

Update: 2020-09-03 22:00 GMT
தூத்துக்குடி,

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிக்கூடங்கள் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான நிலுவைக்கட்டணம் மற்றும் 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணம் ஆகியவற்றை செலுத்தக் கோரி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், 100 சதவீதம் கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் பெறப்படும் புகார்களை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் பிற வாரிய பள்ளிகளின் முதல்வர்கள் கல்வி கட்டணமாக மாணவர்களின் பெற்றோர்களிடம் 100 சதவீதம் கட்டணம் செலுத்தக் கோரி கட்டாயப்படுத்தக்கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தினால், பெற்றோர்கள் ceotuticorin2019@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தகுந்த ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்