தேசிய மாதிரி ஆய்வுத்திட்ட கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்-கலெக்டர் சந்தீப் நந்தூரி வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வுத்திட்ட கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது.

Update: 2020-09-03 21:30 GMT
தூத்துக்குடி,

பொதுநலக் கொள்கையை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய மாதிரி ஆய்வுத்திட்டம் மூலம் அரசு புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. மத்திய அரசின் தேசிய புள்ளி விவர அலுவலகமும், மாநில அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையும் பொதுநல விவரங்களை தேசிய மாதிரி ஆய்வுத்திட்ட கணக்கெடுப்பின் மூலம் சேகரித்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கணக்கெடுப்பில் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உரிய காரணிகளை மதிப்பிடுதல் மற்றும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு மேற்கொள்ளப்பட்ட செலவினம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட சில நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களால் தேசிய மாதிரி ஆய்வுத்திட்டத்துக்கான 78-வது சுற்று விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இந்த கணக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட சில குடும்பங்களில் மக்களின் வாழ்வாதாரம் குறித்த செலவின விவரம், சுற்றுலா சார்ந்த செலவின விவரங்கள், சுகாதாரம், கல்வி, மருத்துவம், தகவல் தொடர்பு, வேலை வாய்ப்பு, வீட்டு வசதி மற்றும் இடப்பெயர்ச்சி சார்ந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

தங்களிடம் இருந்து பெறப்படும் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, திட்டமிடல், கொள்கை வகுத்தல் மற்றும் ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

எனவே பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த கணக்கெடுப்பு அலுவலர்கள் தகவல் சேகரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்கு அடையாள அட்டையுடன் வருகை புரியும் போது, அவர்களுக்கு முழுமையான தகவல்கள் அளித்து கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்