மசினகுடி அருகே, பெண்ணை கடித்து கொன்ற புலியை ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம் - பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை
மசினகுடி அருகே பெண்ணை கடித்து கொன்ற புலியை வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் வனத்துக்குள் செல்லக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.;
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியை சேர்ந்த மசினகுடி குரும்பர்பாடியை சேர்ந்த மாதன். இவரது மனைவி கவுரி (வயது 50). சம்பவத்தன்று முதுமலை வனத்தில் மாதன், கவுரி மற்றும் பலர் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த புலி ஒன்று திடீரென பாய்ந்து கவுரியை கடித்தவாறு வனப்பகுதிகள் இழுத்து சென்றது.
இதுகுறித்து அறிந்த போலீசார், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது புதருக்குள் இறந்த நிலையில் கவுரியின் உடல் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டது. மேலும் அவரது கழுத்தில் புலியின் பற்கள் ஆழமாக பதிந்து இருந்தது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று முன்தினம் கவுரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே பெண்ணை கடித்த புலியால் மீண்டும் ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக மசினகுடி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் வருவாய் மற்றும் ஊராட்சி சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் அடர்ந்த வனத்துக்குள் கால்நடைகளை மேய்க்கவும், விறகு சேகரிக்கவும் செல்லக்கூடாது. அவ்வாறு மீறி சென்றால் வனச்சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இதேபோல் பெண்ணை கடித்த புலியை அடையாளம் காண வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். கேமராக்களை மசினகுடி வனச்சரகர் மாரியப்பன், சிங்காரா வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் புலியின் உருவம் பதிவு ஆகி உள்ளதா என ஆய்வு செய்தனர். ஆனால் கேமராக்களில் புலி நடமாட்டம் பதிவாக வில்லை.
இதைத்தொடர்ந்து ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் புலியின் இருப்பிடத்தை கண்டறிய வனத்துறையினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ட்ரோன் கேமராவை வனத்தின் மீது சுமார் 8 கி.மீட்டர் தூரம் வனத்துறையினர் பறக்க விட்டு பரப்பளவை பதிவு செய்தனர். தொடர்ந்து புலி நடமாட்டம் உள்ளதா என தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் புலி குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து சிங்காரா வனச்சரகர் காந்தன் கூறுகையில், பெண்ணை தாக்கிய புலி நடமாட்டம் எந்த பகுதியில் உள்ளது என கண்காணிக்கப்படுகிறது. இதற்காக நவீன வசதியுடன் கூடிய ட்ரோன் கேமரா மூலம் வனப்பகுதி படம் பிடிக்கப்பட்டது. புலியின் நடவடிக்கையை கண்காணித்தால் பாதுகாப்பை பலப்படுத்த வசதியாக இருக்கும் என்றார்.