என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.6 லட்சம் மோசடி - மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேர் கைது

என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-02 21:45 GMT
கடலூர், 

சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் கீழச்சாவடியை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் பாரதிராஜா (வயது 30). என்ஜினீயரான இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், தான் என்ஜினீயரிங் முடித்துள்ளதாகவும், கடந்த 2017-ம் ஆண்டு திட்டக்குடியை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் சரவணன் (52), செவ்வேரி கிராமத்தை சேர்ந்த சேவாங்கியன் மகன் வெங்கடேசன் (45) ஆகிய 2 பேரும் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.

அப்போது எனக்கும், என்னுடைய அண்ணன் மோகனுக்கும் 45 நாட்களில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் என்ஜினீயர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று கூறி, முன்பணமாக ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டனர். ஆனால் இது வரை அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு ரூ.4 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதி ரூ.6 லட்சத்தை பலமுறை கேட்டும் அவர்கள் தரவில்லை. ஆகவே ரூ.6 லட்சத்தை மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு இது பற்றி உரிய விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) வெங்கடேசன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து பாரதிராஜாவை மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரவணனையும், விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வெங்கடேசனையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்