கொரோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என புகார்: ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

கொரோனாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி நெல்லை தனியார் நிறுவன ஊழியர் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Update: 2020-09-03 01:08 GMT
நெல்லை,

நெல்லை சந்திப்பு சிந்துப்பூந்துறையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 7.7.2020 அன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மறுநாள் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு தனக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை, உணவு வழங்கவில்லை. மேலும், தவறான தகவல் கொடுத்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அந்த மன உளைச்சலுக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறி தனது வக்கீல் பிரம்மா மூலம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

பொய் சான்றிதழ்

இதுகுறித்து சிவசுப்பிரமணியன் கூறியதாவது:-

நான் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். எங்கள் வீட்டு உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 7.7.2020 அன்று எனக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அடுத்த நாள் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்து டாக்டர் கொடுத்த கடிதம் பெற்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். அங்கு 11-ந் தேதி தான் எனக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி தந்தனர். 12-ந் தேதி என்னை பரிசோதனை எதுவும் செய்யாமல் உங்களுக்கு கொரோனா தொற்று குணமாகிவிட்டது, வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறினார்கள்.சிகிச்சை முழுமையாக பெற்று குணம் அடையாமல் நான் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் செல்லமுடியாது. எனக்கு கொரோனா இல்லை என்று சான்றிதழ் தர வேண்டும் என்று கூறினேன். உடனே அவர்கள் நான் 3.7.2020 முதல் 12.7.2020 வரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக ஒரு சான்றிதழ் தந்தனர். ஆனால், நான் 8-ந் தேதி தான் ஆஸ்பத்திரிக்கே சென்றேன். இதனால் அவர்கள் பொய்யாக 3-ந் தேதியே நான் சிகிச்சைக்கு சேர்ந்ததாக சான்றிதழ் கொடுத்து உள்ளனர்.

ரூ.1 கோடி நஷ்டஈடு

மேலும் எனக்கு கொரோனாவுக்கு சரியாக எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை. உணவும் சரியாக வழங்கப்படவில்லை. எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு தமிழக சுகாதாரத்துறை செயலாளர், நெல்லை மாவட்ட கலெக்டர், நெல்லை மருத்துவ கல்லூரி டீன், மாநகராட்சி ஆணையாளர், மாநகர நல அலுவலர், மீனாட்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். இதுதொடர்பாக நுகர்வோர் கோர்ட்டிலும் வழக்கு தொடர உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டீன் விளக்கம்

இதுகுறித்து நெல்லை மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, “சிவசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று இருந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் குறைபாடு, காய்ச்சல் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லை என்பதால் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், நல்ல உணவு வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை முடிந்து திரும்பிய மருத்துவ அறிக்கையை இன்னும் பார்க்கவில்லை. அதை பார்த்த பின்னர் தான் முழு விவரமும் தெரியவரும். மருத்துவ அறிக்கைகள் குறித்த விவரங்களை எடுக்க உத்தரவிட்டு உள்ளேன். இந்த ஆஸ்பத்திரியில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. கொரோனாவுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

மேலும் செய்திகள்