நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதல் பஸ்கள் இயக்கம்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் நேற்று கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், அவர்கள் மாவட்ட எல்லை வரை செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2020-09-03 01:04 GMT
நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு வெளியூர்களுக்கு செல்ல முடியாமலும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முன்தினம் முதல் அரசு, தனியார் பஸ் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுத்தது.

மாவட்ட எல்லையில் நிறுத்தம்

அதன்படி, நேற்று முன்தினம் முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டும் 350 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 150 டவுன் பஸ்கள், 200 புறநகர் பஸ்கள் அடங்கும். இந்த பஸ்கள் அந்தந்த மாவட்ட எல்லையில் நிறுத்தப்பட்டன. தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.

நெல்லையில் இருந்து தென்காசி மாவட்ட எல்லைகளான மாறாந்தை, வன்னிக்கோனேந்தல், ஆம்பூர் ஆகிய இடங்களிலும், தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரம், செய்துங்கநல்லூர், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு விலக்கு வரை பஸ்கள் இயக்கப்பட்டன. பின்னர் அங்கு இருந்து அடுத்த மாவட்டத்திற்கான பஸ்களில் பயணிகள் சென்றனர். ஆனால், முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

கூடுதலாக பஸ்கள் இயக்கம்

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதனால் நெல்லை கோட்டத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கூடுதலாக 200 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று மாவட்டத்தின் எல்லை ஊர்களான ஆலங்குளம், செய்துங்கநல்லூர், வசவப்பபுரம், காவல்கிணறு விலக்கு, வன்னிக்கோனேந்தல் ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு இருந்து பக்கத்துக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஆம்னி பஸ் இயக்கக்கூடிய இடத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து செல்கின்ற பஸ்சில் ஏறிய அனைத்து பயணிகளுக்கும், உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகழுவப்பட்டது. இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டன.

இதேபோல் நெல்லையில் இருந்து அம்பை, பாபநாசம், திசையன்விளை, வள்ளியூர் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்சில் அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகழுவப்பட்டது. டிரைவர், கண்டக்டர்களும் முககவசம், கையுறை அணிந்து இருந்தனர்.

போலீஸ் கண்காணிப்பு

டவுன் பஸ்களில் 60 சதவீத பயணிகள் பயணம் செய்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டதால் சில பஸ்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை பொருட்காட்சி திடலில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இங்கு இருந்து இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து ஏறுகிறார்களா? என்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு செல்லும் டவுன் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் நெல்லையில் இருந்து தென்காசி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு அரசு ஊழியர்களுக்காக இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் அதிக அளவில் ஏறினார்கள். அவர்களிடம் கண்டக்டர்கள் இது அரசு ஊழியர்கள் செல்லும் பஸ், இதில் மற்ற பயணிகள் ஏற அனுமதியில்லை என்று தெரிவித்தனர். அதன்பிறகு பஸ்சில் ஏறிய பயணிகள் கீழே இறங்கினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு நேற்று முன்தினம் முதல் 87 பஸ்கள் இயக்கப்பட்டன. இதுதவிர தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் அரசு பஸ்கள் இயங்கின. வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். அதனை போக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் இருந்து மாவட்ட எல்லை வரை பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து வசவப்பபுரம் வரை 10 பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லைக்கு செல்ல விரும்புகிறவர்கள் இந்த பஸ்களில் சென்று வசவப்பபுரத்தில் இறங்க வேண்டும். அதில் இருந்து நெல்லை மாவட்ட எல்லைக்குள் சென்ற உடன் அங்கு தயாராக இருக்கும் நெல்லை மாவட்ட பஸ்சில் ஏறி நெல்லைக்கு செல்லலாம். இந்த வாய்ப்பை மக்கள் நேற்று முதல் பயன்படுத்தி வருகின்றனர்.

102 பஸ்கள்

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளது.

அதன்படி, நேற்று மதியம் முதல் கூடுதலாக 15 பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 102 பஸ்கள் இயக்கப்பட்டன. ஒரு சில ஊர்களில் மட்டும் தனியார் பஸ்கள், மினிபஸ்கள் இயங்கின. மேலும், தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு போக்குவரத்து கழகம் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்