புதிதாக 397 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் தொற்றுக்கு 13 பேர் சாவு

புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 13 பேர் இறந்தனர். புதிதாக 397 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-09-03 00:04 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று தற்போது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,315 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 293 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

13 பேர் பலி

ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எல்லைப்பிள்ளைசாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 75 வயது முதியவர், முதலியார்பேட்டை நைனார்மண்டபம் கே.வி.நகரை சேர்ந்த 67 வயது முதியவர், ஜெகதாம்பாள் நகரை சேர்ந்த 79 வயது முதியவர், கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த 49 வயது ஆண், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோர் உயிரிழந்தனர்.

தனியார் ஆஸ்பத்திரிகளில் முதலியார்பேட்டை வசந்தம் நகரை சேர்ந்த 76 வயது முதியவரும், கலைமணிகுப்பம் புவனகிரி தெருவை சேர்ந்த 67 வயது முதியவரும், தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த 53 வயது ஆணும், புதுவை அரசு ஆஸ்பத்திரியில் வீராம்பட்டினம் நாகூரான் தோட்டத்தை சேர்ந்த 62 வயது முதியவரும், ஜிப்மரில் மூலக்குளத்தை சேர்ந்த 58 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளனர். ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் 88 வயது முதியவர், 45 வயது பெண், 58 வயது ஆண் ஆகியோரும் இறந்துள்ளனர்.

15 ஆயிரம் பேர் பாதிப்பு

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 77 ஆயிரத்து 428 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 60 ஆயிரத்து 902 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. 15 ஆயிரத்து 157 பேர் தொற்றினால் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 936 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அதாவது 2 ஆயிரத்து 646 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 290 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 ஆயிரத்து 968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 253 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது புதுச்சேரியில் 213 பேரும், காரைக்காலில் 14 பேரும், ஏனாமில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்