உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடி சிக்கியது கார் பறிமுதல் - 2 பேர் கைது

கோலார் மாவட்டம் சீனிவாசப்புரா தாலுகாவில் நள்ளிரவில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.3 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-09-02 23:29 GMT
பெங்களூரு,

கோலார் மாவட்டம் சீனிவாசப்புரா தாலுகாவிற்கு உட்பட்ட ஜோஜேனஹள்ளி கேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சீனிவாசப்புரா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக ஒரு கார் வந்தது. போலீசாரைக் கண்டதும் டிரைவர் காரை திருப்பிக் கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை விரட்டிச்சென்று மடக்கினர்.

பின்னர் காரில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கோலாரைச் சேர்ந்த சந்துரு மற்றும் அமர்நாத் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் காரில் சில பைகளை வைத்திருந்தனர். அந்த பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

ரூ.3 கோடி ரொக்கம்

அந்த பணம் குறித்து இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் சந்துரு மற்றும் அமர்நாத்தை சீனிவாசப்புரா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டியும் உடனடியாக சீனிவாசப்புரா போலீஸ் நிலையத்திற்கு வந்து சந்துருவிடமும், அமர்நாத்திடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து எந்தவிதமான உரிய ஆவணங்களோ, ரசீதோ இன்றி காரில் ரூ.3 கோடியை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்துருவையும், அமர்நாத்தையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 கோடி ரொக்கம், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் விசாரணை

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது?, இது யாருடைய பணம்?, இந்த பணத்தை அவர்கள் எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்