திருச்சி அருகே திருமணமான 52-வது நாளில் புதுப்பெண் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கடித்து கொலை

திருச்சி அருகே திருமணமான 52-வது நாளில் தாம்பத்ய உறவுக்கு வர மறுத்ததால் புதுப்பெண்ணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கடித்து அவருடைய கணவரே கொலைசெய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-08-30 23:25 GMT
கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நெ.1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றங்கரையோரத்தில் உள்ளது வாழவந்திபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 28). இவர் கேரளா மாநிலத்தில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், லால்குடி அருகே உள்ள மணக்கால் பகுதியை சேர்ந்த திரவியநாதனின் மகள் கிறிஸ்டிஹெலன்ராணிக்கும் (26) பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு கடந்த மாதம் 10-ந்தேதி திருமணம் நடைபெற்றது. கிறிஸ்டிஹெலன்ராணி பட்டதாரி பெண் ஆவார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வாழவந்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு மாடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் அருள்ராஜ் கண்விழித்து பார்த்தபோது அருகில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை காணவில்லை. இதனால் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்று இருப்பார் என நினைத்து மீண்டும் அவர் தூங்கிவிட்டார்.

நிர்வாண நிலையில் பிணம்

பின்னர் நீண்ட நேரம் ஆகியும், மனைவியை காணாததால் சந்தேகம் அடைந்த அருள்ராஜ் அக்கம் பக்கத்தில் சென்று தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது உறவினர்களுடன், அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு சென்று தேடினார்.

அப்போது, கொள்ளிடம் ஆற்று பகுதியில் கிறிஸ்டிஹெலன்ராணியின் ஆடைகள் ஆங்காங்கே கிடந்தன. அத்துடன் அவர் ஆற்று தண்ணீரில் ஆடைகளின்றி பிணமாக மிதந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு, தாலி உள்பட 5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

போலீஸ் விசாரணை

உடனே இதுபற்றி கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அப்போது, அது சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கிறிஸ்டிஹெலன்ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கிறிஸ்டிஹெலன்ராணியின் தந்தை திரவியநாதன் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கொலை செய்துவிட்டு நாடகம்

அப்போது, கிறிஸ்டிஹெலன்ராணியின் கணவர் அருள்ராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர், மனைவியை கொலை செய்துவிட்டு, நகைக்காக கொலை நடந்தது போல் நாடகம் ஆடியது அம்பலமானது.

இதைத்தொடர்ந்து அருள்ராஜை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

திருமணமான நாள் முதல் எங்களுக்குள் தாம்பத்ய உறவு சரிவர நடைபெறவில்லை. நான் தாம்பத்ய உறவுக்கு அழைக்கும்போதெல்லாம் எனது மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். நேற்று முன்தினம் இரவும் தாம்பத்ய உறவுக்கு அழைத்த போது மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இருப்பினும் எங்களுக்குள் தாம்பத்ய உறவு நடந்து முடிந்தது.

தண்ணீரில் மூழ்கடித்து கொலை

மீண்டும் எனது மனைவியை தாம்பத்ய உறவுக்கு அழைத்தபோது, அவர் என்னிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர், நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு சென்ற என் மனைவியை நான் பின் தொடர்ந்து சென்றேன். அப்போது கொள்ளிடம் ஆற்று பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரில் அவளை மூழ்கடித்து கொலை செய்தேன்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக, எனது மனைவி அணிந்திருந்த நகைகளை கழற்றிக்கொண்டதுடன், கற்பழித்து கொலை செய்தது போல் போலீசாரை நம்ப வைக்க, அவர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி, உடலை நிர்வாணமாக தண்ணீரில் வீசினேன். பின்னர் வீட்டிற்கு வந்து மனைவியை காணவில்லை என்று உறவினர்களிடம் கூறி நாடகமாடினேன். போலீசார் நடத்திய விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்