உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு: டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.1¾ லட்சம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-08-28 22:15 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேற்பார்வையாளராக செல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ராஜாராம் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு மதுவிற்பனை மூலம் வசூலான ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பின்னால் ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சர் கடை சக்திவேல் என்பவர் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு திடீரென இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் ராஜாராம் கையில் இருக்கும் பணத்தை பறிக்கும் நோக்கில் அரிவாளால் வெட்டினார்கள். அப்போது சுதாரித்துக்கொண்ட ராஜாராம் பணத்தை கீழே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடினார். இதை தடுக்க முயன்ற சக்திவேலை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் மர்மநபர்களால் வெட்டப்பட்ட சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி டாஸ்மாக் ஊழியரையும், தொழிலாளியையும் தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த டாஸ்மாக் கடையில் இதற்கு முன்பு இதே போன்று 6 கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் ஏற்கனவே நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு இந்த கொள்ளை சம்பவத்திலும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்