வங்கி முன்பு தொழிலாளி தீக்குளிப்பு, மேலாளரை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் - தஞ்சை அருகே பரபரப்பு
தஞ்சை அருகே வங்கி முன்பு தொழிலாளி தீக்குளித்தார். இந்தநிலையில் வங்கி மேலாளரை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை அருகே உள்ள வல்லத்தை சேர்ந்தவர் ஆனந்த்(வயது40). வெல்டிங் தொழிலாளியான இவர் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடந்த 2015-ம் ஆண்டு வீடு கட்ட ரூ.9 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் தொடர்பாக வங்கி சார்பில் ஆனந்துக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினம் வங்கிக்கு சென்ற ஆனந்த் ரூ.3 லட்சத்தை செலுத்துவதாக கூறி உள்ளார். இதனை ஏற்காத வங்கி அதிகாரிகள் வட்டியுடன் முழு தொகையையும் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். தவறும்பட்சத்தில் வீட்டை ஜப்தி செய்வதாக மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த ஆனந்த் நேற்று முன் தினம் மாலை வல்லத்தில் உள்ள வங்கி வாசலில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவர் தற்போது தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் நேற்று வங்கி அதிகாரிகளை கண்டித்து வல்லத்தில் உள்ள வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விவசாயிகள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வங்கி மேலாளரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தஞ்சை ஒன்றிய செயலாளர் மாலதி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர் பார்வதி, தீக்குளித்த தொழிலாளி ஆனந்தின் தந்தை தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த பிரச்சினை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் வங்கியின் கதவுகள் நேற்று மூடப்பட்டு இருந்தது. பூட்டப்பட்ட வங்கிக்குள் இருந்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
வங்கிக்கு வெளியே இருந்த ஏ.டி.எம். மையமும் மூடப்பட்டு இருந்தது. தீக்குளித்த தொழிலாளி ஆனந்த் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.