காவிரி உபவடிநில பகுதிகளில் பாசன அமைப்புகளை நவீனப்படுத்த ரூ.3,384 கோடியில் திட்டம் - திருவாரூரில், எடப்பாடி பழனிசாமி பேச்சு

காவிரி உபவடிநில பகுதிகளில் பாசன அமைப்புகளை நவீனப்படுத்த ரூ.3,384 கோடியில் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக திருவாரூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-08-28 22:15 GMT
திருவாரூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உணவுப்பூங்கா அமைக்கப்படும். கொரோனா காலத்திலும் தமிழகத்தில் மட்டும் ரூ.31 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை இந்த 5 மாதங்களில் நாம் ஈர்த்திருக்கிறோம். கொரோனா காலத்திலும் இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம் தான்.

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் தொழில் தான் பிரதான தொழிலாக இருக்கிறது. வேறு எந்த தொழிலும் பிரதானமாக இல்லை என் று அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார். அவருடைய கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளை பொருட்களை கொண்டு ஒரு புதிய தொழில் இந்த மாவட்டத்தில் தொடங்குவதற்கு அரசு முயற்சிக்கும்.

டெல்டா பகுதியான இந்த கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு எந்தவித தடையும் இல்லாமல் நீர் கிடைப்பதற்காக கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளன. பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் தேக்கி வைத்து கோடை காலத்தில் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக திருவாரூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள், ஊரணிகள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு இருக்கின்றன. நீர் மேலாண்மை திட்டத்திற்கு அரசு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது.

நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி உப வடிநில பகுதிகளில் பாசன அமைப்புகளை விரிவுபடுத்துதல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டம் ரூ.3 ஆயிரத்து 384 கோடி மதிப்பீட்டில் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் தொடர்ந்து என்னிடம் வலியுறுத்தி வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தை உள்ளடக்கிய டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூரில் ரூ.10 கோடி செலவில் உணவுப்பூங்கா அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் முதல்-அமைச்சரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- காவிரி டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருப்பது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு விதிமுறைகள் எப்போது அறிவிக்கப்படும்?.

பதில்:- ஏற்கனவே விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அதன்படி 8 வகையான தொழில்கள் இந்த பகுதியில் தொடங்க முடியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் 8 தொழில்கள் தொடங்க தடை விதித்து அதற்கான சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மீத்தேன் மற்றும் நிலக்கரி படுகைக்கு தடை. ஹைட்ரோகார்பன் எடுக்க, கிணறு தோண்ட தடை. துத்தநாகம் உருக்கு ஆலை தொடங்க தடை. இரும்பு தாது எக்கு ஆலை, செம்பு உருக்கு ஆலை, அலுமினிய உருக்கு ஆலைக்கு தடை. தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு தடை. கப்பல் வடிவமைக்கும் தொழிற்சாலைக்கு தடை. விலங்குகள் உடல் பாகங்கள் பதப்படுத்துவதற்கு தடை ஆக இந்த 8 தொழில்களும் தொடங்கக்கூடாது. இந்த திட்டங்களை தொடங்கினால் விவசாயிகள், விவசாய நிலங்கள் பாதிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய மற்ற மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தது போல தமிழக அரசு வழக்கு தொடருமா?

பதில்:- கொரோனா பரவலால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கடந்த 8-7-2020 அன்று பிரதமருக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதினேன். மத்திய மந்திரிக்கும் கடிதம் எழுதி உள்ளேன். 2 நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரும், மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கேள்வி:- டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டாலும், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றுவது தடை செய்யப்படுமா?

பதில்:- வீட்டுமனை என்பது அத்தியாவசிய பணி. எல்லோரும் வாழ்வதற்கு வீடு தேவை. ஆனால் அதிகமாக வீட்டுமனைகளுக்கு நிலம் எடுக்கக்கூடாது. எல்லோரும் நகர் பகுதியில் வசிக்க ஆசைப்படுகிறார்கள்.

கேள்வி:- மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் எடுக்கும் சரபங்கா திட்டத்தில் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குளம், ஏரி நிரப்பப்படும் என்று அறிவித்து உள்ளர்கள். இதனால் டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஒரு போகம் தான் விவசாயம் செய்ய முடியும் என்று டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே?

பதில்:- நீங்கள் கேட்ட கேள்வியிலேயே உபரி நீர் என்று கூறிவிட்டீர்கள். நாங்கள் உபரி நீரைத்தான் பயன்படுத்துகிறோம்.

கேள்வி:- அருந்ததியினருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறி உள்ளதே?

பதில்:- அது தொடரும். அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்