குமரியில் புதிதாக 104 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி - பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது

குமரி மாவட்டத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் நேற்று 3 பேர் இறந்தனர்.

Update: 2020-08-28 06:10 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் நோய்த்தொற்று குறைந்தபாடில்லை. தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குமரியில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,994 ஆக இருந்தது.

நேற்று புதிதாக 104 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்து 9 ஆயிரத்து 98 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரி, கொரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் நேற்று முன்தினம் யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரை கொரோனா காவு வாங்கியது.

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்கனவே 166 பேர் பலியாகி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது பலியானவர்களை சேர்த்து பலி எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்